freelancing writer

My photo
Am Freelance in any Area !

Thursday, December 26, 2019

சமகால அரசியலை பேசுகிறதா ஹே ராம் ? - திரைப்படம் விளக்கம்

இன்றைய காலக்கட்டத்தில் பாசிசம் என்பது இந்தியாவில் பல இடங்களில் மறைமுகமாகவும், சில இடங்களில் நேரடியாகவும் செயல்பட்டு வருகிறது. 

முதலில் பாசிசம் னா என்னனு சுருக்கமாக பார்போம். தனி மனிதனுக்கு என்று இல்லாமல் எல்லாமும் எல்லாவருக்கும் என்ற பொதுவுடமையை முடக்கும் ஒரு செயல்பாடுதான் பாசிசம். இந்த செயல்பாட்டுக்கு பிரபலமானவர் ஹிட்லர். இந்தியாவை பொறுத்தவரை நிறைய பாசிசம் ஒளிந்திருக்கிறது. மதம், சாதி, கலாச்சாரம் னு பெரும்பான்மை ன்ற போர்வையில் சிறுபான்மையினர் ஒடுக்குவது தான் நம்ம இந்தியாவில் நடக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கடந்த 7  ஆண்டுகால நிகழ்வுகள்.. 

சரி ! பாசிசத்துக்கும் ஹே ராம் படத்துக்கும் என்ன சமந்தம்? 
ஹிட்லருக்கும் ஹே ராம் படத்துக்கும் எந்ந சமந்தம் ? 
சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கும் ஹே ராம் படத்துக்கும் எந்ந சமந்தம் ?
இந்திய அரசியல் ஆணி வேருக்கும் ஹே ராம் படத்துக்கும் எந்ந சமந்தம் ?
இப்படி நிறைய கேள்விகளுடன் இந்த கட்டுரையை தொடங்கலாம். 

திரைப்படத்தின் கதை :
ஒரு உண்மையான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் புனைவான ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கை மற்றும் அந்த கதாபாத்திரத்தின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த படத்தின் சாரம். DECEMBER 6 1999 இந்த நாளில் படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. மரணபடுக்கையில் இருக்கும் சாகேத் ராம் (கமல் ஹாசன்) என்ற பெரியவரை மருத்துவர் பரிசோதனை செய்து கொண்டு இருப்பது போல காட்சி அமைந்திருக்கும். இதில் வரும் கமல் ஹாசனின் பேரனின் பெயரும் சாகேத் ராம். இவர் ஒரு எழுத்தாளராக இருப்பார். டாக்டரிடம் தன்னுடைய அடுத்த படைப்பு பற்றி பேசும் காட்சியாக அமைந்திருக்கும்

DIRECTOR HINT : 
(அவரின் அடுத்த படைப்பு தன் தாத்தாவுடைய கதையாக இருக்கும், அது BIOGRAPHY ம் FICTION ம் கலந்த கதையாக இருக்கும். என்று சொல்லுவர். இந்த காட்சியில் பின் வரும் படத்தின் சாரத்தையும் திரைக்கதை அமைப்பையும் கூறியிருப்பார். மேலும் சாகேத் ராமின் கதையை சாகேத் ராம் (பேரன்) வழியே கதை சொல்லப்பட்டிருக்கும்)

அடுத்த காட்சி சாகேத் ராமுடைய வாலிப காலத்திற்கு கதை கொண்டு செல்கிறது. 
சிந்து சமவெளி நாகரிகத்தில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் வீலர் என்பவரின் தலைமையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சாகேத் ராம் வேலை செய்து வருகிறார். இவருடன் இவரது நெருங்கிய நண்பர் அம்ஜித் அலிகான் (ஷாருக் கான்) வேலை செய்து வருகிறார். இந்தியா பாகிஸ்தான் பிளவு பிரச்னை துவங்கியது அதனால் இந்த வேலை நிறுத்தப்படுகிறது. 

DIRECTOR HINT 


(Wheelar  என்பவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர். இவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த இடத்தில் அதாவது சிந்து சமவெளி நாகரிகம் (indus valley civilization) தொடர்பாக ஆராய்ச்சியை 1945 ல் துவங்கி செய்து வந்தவர். இதற்கு முன்பாக ஹென்றி ஹெர்ப்ஸ் என்பவர் தான் சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியை துவங்கியவர் மற்றும் இவங்க இரண்டு பேரோட ஆசை என்பது சிந்து சமவெளி நாகரீகத்தை முழுமையா செய்து முடிக்க வேண்டும் என்பதே, ஆனால்  இந்திய பாகிஸ்தான் பிரிவினை காரணமாக இது முழுமையாக நடைபெறவில்லை. என்பது கூடுதல் தகவல்.)


அதன்பின் அங்கிருந்து சாகேத் ராம் தன் மனைவியை பார்க்க கொல்கத்தாவிற்கு செல்கிறார். அவர் சென்ற நாள் ஆகஸ்ட் 16 1946 , அன்றுதான் பாகிஸ்தான் அதிபர் ஜின்னா DIRECT ACTION DAY என்ற அறிவிப்பை வெளியிடுகிறார். அதன் விளைவாக கொல்கத்தாவில் கடையடைப்பு, பிரச்சனைகள் என்று நடந்து வருகிறது. சாலையில் முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். பின் தன் மனைவியை சந்திக்கிறார்.

DIRECTOR HINT

(ஜின்னா, இவர் அனைவருக்கும் தெரிந்தவரே, பாகிஸ்தான் நாட்டின் தந்தை னு சொல்லுவாங்க. பாகிஸ்தான் நாட்டின் அரசை உருவாக்கியவர் இவர்தான் 1946 ஆகஸ்ட் 16 DIRECT ACTION DAY – என்ற பெயரில் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு ஜின்னா சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் முஸ்லீம்களை போராட்டத்தில் ஈடுபடுங்கள் அதன் விளைவு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் நம் வேண்டுகோளை கொண்டு சேர்க்கும் என்று கூறியுள்ளார்)

பின் சாகேத் ராம் உணவு வாங்குவதற்காக இரவு நேரத்தில் வெளியே செல்கிறார். அப்போது சீக்கிய மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லீம் மதத்தினர் தொரத்திட்டு போறாங்க. அந்த பெண்ணை சாகேத் ராம் காப்பற்றி வீட்டில் கொண்டு சேர்கிறார். பின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவர் வீட்டில் சில முஸ்லீம்கள் சென்று இவரை தாக்கி விட்டு அவரது மனைவியையும் கற்பழித்து கொன்று விடுகிறார். 

அந்த கோவத்தில் ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டு முஸ்லீம் தெருக்களில் சென்று அவரது மனைவியை கொலை செய்தவர்களை கொலை செய்கிறார். எதிர்பாராத விதமாக ஒரு வயதான முஸ்லீமையும் சுட்டு கொல்றாரு, ஆனா அதற்கு சாகேத் வருத்தமடையவில்லை. அந்த இறந்த வயதானவருக்கு ஒரு கண்ணு தெரியாத பேத்தி இருக்காங்க, அத பாத்து ராம் பயந்து போறாரு அதே இடத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லீம் மக்களை கொண்னு குவிக்குறாங்க.. 
அவரது மனைவி சாவுக்கு இந்த பிரச்சனை அவருக்கு பெரிதாக தெரியவில்லை. இந்த சமயத்தில் தான் ஸ்ரீராம் அபியங்கார் (அதுல் குல்கர்னி) என்பரை சந்திக்கிறார். ஸ்ரீராம், இந்த பிரச்சனைக்கு லாம் காரணம் காந்தியடிகள் தான் என்ற ஒரு பிம்பத்தை ராமுடைய எண்ணங்களில் விதைக்கிறார். பின் ராமுக்கு தடை செய்யப்பட்ட ஒரு புத்தகத்தையும் படிக்க சொல்லி கொடுக்கிறார். பின் ராம் க்கு காந்தியடிகள் மீதும், முஸ்லீம்கள் மீதும் கோவம் அதிகமாக ஆகிறது. 

பின் தமிழ்நாட்டுக்கு செல்கிறார். ராம் உடைய குடும்பத்தார் ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்தவர், இந்த குடும்பத்திற்கு காந்தியடிகள் மீதும் கடவுள் மீதும் மிகப்பெரிய பற்று உள்ளது. பின் காந்தியடிகள் கொல்கத்தாவிற்கு வரப்போவதாக தகவல் இவருக்கு கிடைகின்றது. அங்கு எதர்ச்சையாக காந்தியடிகளை பார்க்கிறார். இந்த கலவரத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்று கொள்வது? என்று மக்கள் கூட்டத்தில் இருந்த ராம் கேட்க, பொறுப்பை நான் ஏற்று கொள்கிறேன் என்று இந்த பிரச்சனைக்கான சூத்ரதாரி மற்றும் காந்தியடிகள் ஒப்பு கொள்கிறார்கள். 
கோவமாக வந்த மக்கள் காந்தியின் பேச்சை கேட்டு அமைதியாக செல்கிறார்கள். மீண்டும் ராம், ஸ்ரீ ராமை சந்திக்கிறார். மேலும் ஸ்ரீராம் ராமிற்கு ஒரு சிந்தனையை கொடுக்கிறார். ஸ்ரீ ராம் ராமிடம், “இந்த மூளை இல்லாத ஆட்டுமந்தை ஆட்டு பால் குடிக்கும் இந்த தாத்தா பின்னாடி போயிட்ருக்கு, ஆனா தாத்தா பக்ரீத் கொண்டாட போயிற்றுக்காரு னு தெரியாது”  மீண்டும் ராம் தன் சொந்த ஊருக்கு செல்கிறார். ராம் ற்கு மறுமணம் செய்து முடித்தனர். திருமணம் ஆன போதும் இவரது இறந்த மனைவி ஞாபகம் வந்தவண்ணம் இருந்தது. பின் மனைவியுடன் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார்.

Flight scene : 

Flight ல போகும்போது ராம் அந்த தடை செய்யப்பட்ட புத்தகத்தை படித்து வருவார். அப்போ அவரது மனைவி புத்தகத்தை பற்றி கேட்க அதை தவிர்த்து விட்டு காந்தியடிகள் பற்றி பேசுவார். பின் ராம் ஒரு செய்தி தாளை மேற்காட்டி இது என்ன? வென்று கேட்பார். அதற்கு அவரது மனைவி எ=காந்தி எது செய்தாலும் நல்லதுக்காகவே இருக்கும் என்று கூறுவார். அந்த செய்தி தாளில், Ill’ walk to Pakistan and I save hindu  வென்று குறிப்பிட்டிருக்கும். பின் காந்தியடிகள் மீது பற்று கொண்டவர்கள்  கண் காது வாய் மூடி கொண்ட குரங்குகள் என்று ராம் விமர்சிப்பார். அதற்கு அவரது மனைவி காந்தியின் மீது உள்ள பற்றால் ராம் சொன்ன விமர்சனத்தை ஆரோக்கியமாக மறுத்து பேசுவார். இப்படியே அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 

DIRECTOR HINT

(Ill’ walk to Pakistan and I save hindu   என்ற செய்திக்கு காரணம், பாகிஸ்தானில் அப்போது சிறுபான்மையினராக இருந்த இந்துக்களை  கொன்னு குவித்தார்கள், அப்போது  காந்தியடிகள் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை எதுவும் செய்யக் கூடாது, அவர்கள் நம் சகோதரர்கள், பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சனைக்கு நான் தீர்வு கொண்டு வருகிறேன் என்று காந்தியடிகள் சொல்றார். அந்த பெட்டியின் செய்திதான் செய்தி தாளில் அன்று அப்படி தலைப்பு செய்தியாக வந்துள்ளது. இதை ராம் காந்தியின் மேல் உள்ள கோவத்தால் மறுத்து பேசுவார். ராம் தன் முதலிரவில் ஒறு புத்தகத்தை படிப்பார். அது காந்தியின் வழக்கை வரலாறு, அதற்கு அவர் அவரது மனைவியிடம் வேறு புத்தகம் இல்லை அதனால் தான் இதை படித்தேன் மற்ற படி I hate biography என்று கூறுவார். Flight ல் இவர் அந்த தடை செய்யப்பட்ட புத்தகத்தை பற்றி பேசும்போது ராமின் மனைவி “I hate semi fictional story” என்று கூறுவார். மீண்டும் ஒரு முறை இந்த படம் ஒரு BIOGRAPHIC FICTION STORY என்று எடுத்து கூறியிருப்பார்) 

மகாராஸ்டிராவில் ஒரு அரசரை ஸ்ரீ ராம் மூலம் சந்திக்கிறார். அந்த அரசர் காந்திக்கு எதிராக செயல்படுபவர். காந்தியை கொலை செய்வதற்காக திட்டம் போட்டு கொண்டிருப்பவர்.  காரணம் இந்திய அரசு உருவாக்கத்தின் போது அரசர் மற்றும் அவருடைய திட்டங்களுக்கு வலுவில்லாமல் இருந்தது. மீண்டும் மன்னராட்சி கொண்டு வரவேண்டும், அதற்கு இடையூராக இருக்கும் இந்த அரசியல் உருவாக்கத்தையும், அதற்கு காரணியாக இருக்கும் காந்தியடிகளையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவார். 

DIRECTOR HINT 

(இந்து பாதுகாப்பு அமைப்பு அலுவலகத்தில் ஹிட்லர் புகைப்படம் இருக்கும். அதற்க்கு காரணம் இந்து அமைப்பினர் அதாவது RSS அமைப்பினரோட கொள்கை முன்னோடியாக ஹிட்லர் இருந்தது குறிப்பிடத்தக்கது.) 

பின் ஒரு காட்சியில் ராம், ஸ்ரீ ராம் அரசருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருக்கும் போது, ரயில் செல்வதற்காக RAILWAY GATE மூடப்படும், ஒருவர் மன்னர் வருகிறார் அந்த GATE ஐ திறந்து விட வேண்டி கேட்பார். அது முடியாமல் போகும் அதற்கு    இந்தியாவில் மன்னர்களுக்கு அனைத்து GATE ஐயும் மூட்டி விட்டனர். இந்த GATE மட்டும் மூடி இருந்ததினால் என்ன என்று கேட்பார்.  பின் ராம் தன் மற்றொரு நண்பரான லால்வாணியை சந்திப்பர், லால்வாணி தன் கமனைவியையும் குழந்தையும் கலவரத்தில் இழந்து ஏழ்மையான நிலையில் இருப்பார். 
பின் ராம் அவரை மன்னருக்கு அறிமுகப்படுத்தி தன்னோடு அழைத்தும் செல்வார். அவருக்கு மன்னர் மூலம் வேலையும் வாங்கி தருவார். 
பின் காந்தியடிகளை கொலை செய்ய ஸ்ரீராமையும் ,சாகேத் ராம் ஐயும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு நாள் குதிரை பந்தையத்தில் விபத்து ஏற்படுகிறது. இதில் ஸ்ரீ ராம் க்கு அடிபடுகிறது. அவரால் எழுந்து நடக்க முடியாது என்று மருத்துவர் கூறுகிறார். விபத்தில் குதிரைக்கும் அடிப்பட்டது, பின் மன்னர் குதிரையும் கொன்று விடுகிறார். 
DIRECTOR HINT 

(உன்னால் எனக்கு பயனுள்ளது, பயனில்லாமல் போனால் கொன்று விட வேண்டும் என்ற கருத்தையே மன்னர் அடிப்படையாக கொண்டிருந்தார். இதன் காரணமாகதான்  ராமிற்காக லால்வாணிக்கு வேலை ஏற்பாடு செய்திருப்பார் அரசர்) 
பின் ஸ்ரீராம் ஐ ராம் சந்திக்கிறார். அப்போது ஸ்ரீராமுடைய ஆசையை ராம் நிறைவேற்ற வேண்டும் என்று நிற்பந்திக்கிறார். ராமும் சம்மதிக்கிறார். பின் தொடர்ந்து தன் சொந்த ஊருக்கு திரும்பிகிறார் ராம். அங்கு காந்தியை கொலை செய்ய தேவையான ஆயுதத்தை தயார் செய்கிறார். மன்னரிடமிருந்து தகவல் வந்த பிறகு தான் காந்தியை கொல்ல வேண்டும் என்ற காரணத்தினால் ராம் காத்திருக்கிறார். மகாராஷ்டிராவில் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்த ராம், ஸ்ரீ ராமுக்கு செய்து கொடுத்த சத்தியத்தினால் மனைவியிடம் இருந்து விலகியே இருக்கிறார். 

பின் தகவலும் வந்தது அதில் டெல்லியில் காந்தி ஒரு மாதம் இருக்க போகிறார், இப்போது வேலையை தொடங்கலாம் என்று இருக்கும், அதன் பின் ராம் டெல்லி செல்கிறார். அங்கு ஒரு ஹோட்டலில் பைரவ் என்ற பெயரில் ரூம் எடுத்து தங்குகிறார். காந்தி இருக்கும் இடத்தில் சென்று பார்க்கிறார். அவர் இருந்த இடத்தின் பின்னால் ஒரு ஆட்டு குடிலில் சென்று காந்தியை போட்டோ எடுக்க இடம் பார்பதாக கூறி இடம் பார்க்கிறார். அதற்கு முன்பாகவே ஒரு சிலர் அதே காரணத்துடன் இங்கு வந்தது ராமிற்கு தெரிய வருகிறது.

DIRECTOR HINT 

(காந்தியடிகள் ஆட்டுப்பால் குடிப்பார் என்பது பெரும்பாலும் பலருக்கு தெரிந்தது. காந்தியடிகள் மட்டுமல்லாமல் அவருடன் இருந்தவரும் சிலர் அதையே பின்பற்றியும் வந்தனர். காந்தி இருக்கும் இடம் என்ற பார்வையை உருவாக்கவே காந்தி இருந்த அந்த ஆசிரமம் பின் ஒரு ஆட்டு மந்தை குடில் போல இடம் அமைக்கப் பட்டிருக்கும்.)

அங்கு திடீரென ராம் தனது மாமனாரை சந்திப்பார். முன்பு சொன்னது போல் ராமின் குடும்பத்தார் காந்தியின் மீதி பெரும் பற்று கொண்டிருப்பவர்கள் அதனால் காந்தியை சந்திக்க வந்திருப்பார்கள். பின் ராமிற்கு வந்த தபால் கடிதம் பாதி இருக்கும் நிலையில் ராம் காந்தியடிகளுக்கு சேவை செய்ய வந்திருப்பதாகவும் நினைத்து கொண்டனர்.பின் காந்தியை சந்திக்க ஏற்பாடும் செய்து தருகிறார் ராமின் மாமனார். பின் சிறிய வெடிவிபத்து ஏற்படுகிறது. அப்போது தான் ராமிற்கு தெரிய வருகிறது முன்பு போட்டோ எடுப்பதற்காக வந்தவர்களும் காந்தியை கொல்ல தான் வந்துள்ளார் என்று, பின் இந்த குண்டு வெடிப்பின் தொடர்பாக ராம் இருந்த ஹோட்டலில் போலிஸ் சோதனைக்கு வருகிறார்கள். ராம் தன்னிடம் இருந்த துப்பாக்கியை மறைத்து வைக்க முயற்சி செய்கிறார். பின் வெளியே நின்று இருந்த ஒரு சோடா லாரியில் துப்பாக்கியை வைத்து விட்டு போலீசிடம் பேசுகிறார். 

DIRECTOR HINT 

(போலிஸ் ராமிடம் ஹிந்தியில் விசாரிப்பார், அதற்கு ராம் எனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறுவார். ஆனால் உண்மையில் ராம் கொல்கத்தாவிலும் பாகிஸ்தான் எல்லையிலும் வேலை செய்தவர்க்கு ஹிந்தி பேசுவது சுலபம் ஆனால் பேசவில்லை, இந்த காட்சியில் “I DON’T KNOW HINDI” என்று கூறாமல் “I DON’T SPEAK HINDI” என்று அதாவது நான் ஹிந்தி பேசமாட்டேன் என்று கூறியிருப்பார். இதற்கு காரணம் தன் அடியாளத்தை காட்டிக்க கூடாது என்பதர்க்காகவும் இருக்கலாம். இல்லை கமலில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கொள்கையாகவும் இருக்கலாம்.)

பின் போலிஸ் போன பிறகு அந்த துப்பாக்கிய எடுக்க போறாரு. அங்க அந்த சோடா வண்டி இல்லை. அதன்பின் தன்னோட பர்ஸ் அதுல விழுந்துடுச்சு அதுல நிறைய பணம் இருந்ததுனு பொய் சொல்லி, விசாரித்து பாக்கும்போது அது ஆபத்தான இடம் அங்க வெறும் முஸ்லீம்கள் தான் இருப்பாங்க னு கேள்விபடுறாரு, பின் அந்த இடத்துக்கு போக தனக்கு ஒரு முஸ்லீம் பெண் விலைமாதராக தேவை னு ஏஜன்ட் ஒருவர் உதவியுடன் அந்த இடத்துக்கு போறாரு. அங்க அவருடைய நெருங்கிய நண்பனான அம்ஜித் கான் (ஷாருக்கான்) ஐ பார்கிறார். பின் அம்ஜித் கான் உதவியோட அந்த இடத்துக்கு போறாரு. 

அங்க வாக்குவாதம் ஏற்பட்டு ராம் ஒரு இந்து மற்றும் அவர் துப்பாக்கி தேடி வந்திருக்கிறார், அவர் முஸ்லீம்களை கொல்ல இங்க வந்துருக்காரு னு அங்க இருக்கும் சிலர் சொல்றாங்க. இத அம்ஜித்கான் நம்பவில்லை, தன்னுடைய நண்பர் பொய் பேசாத ஒரு நல்லவர் என்று வாக்குவாதம் செய்றாரு. பின் ராம் உண்மைய ஒத்துக்கிறாரு, ஆனால் உங்களை நான் கொல்ல வரவில்லை னு சொல்றாரு. அதன் பின் ராம் மீது துப்பாக்கி சண்டை நடக்குது அங்கிருந்து அம்ஜித்கான் தன் நண்பனான ராம் ஐ காப்பற்றி கொண்டு போறாரு, இதற்கிடையே விலைமாதர் ஏஜன்ட் ஒருவர் இந்து அமைப்பினருக்கு போன் செய்து இங்க ஒரு குட்டி பாகிஸ்தானே இருக்கு சீக்கிரம் வாங்கனு சொல்றாரு. அதே மாதிரி இந்து அமைப்பினரும் அந்த இடத்திற்கு வந்தனர். அங்கு இந்து அமைப்பினர் அம்ஜித் கானை தாக்குறாங்க. பலத்த அடியோட ராம் அவர காப்பாற்றி ஒரு இடத்துக்கு கொண்டு போறாரு. அங்க முஸ்லீம் பெண்களும் குழந்தைகளும் இருக்காங்க. அதன் பின் ராம் முஸ்லீம் சிலரோடு சேர்ந்து இந்துக்களை கொல்றாரு. அதன்பின் போலீஸ் தடுத்து நிறுத்தி அம்ஜித் ஐ மருத்துவமனையில் அனுமதிக்குறாங்க. 
அங்க போலிஸ் அம்ஜித்தை விசாரிக்கிறார்கள். பைரவ் (கமல்ஹாசன்) என்பவரால் தான் இந்த கலவரம் உருவானது அவர் யார் எப்படி இருந்தார் என்று கேள்வி கேட்டனர்.அதற்கு அம்ஜித், அப்படிப்பட்ட ஒரு மிருகத்தை நான் பார்த்தது இல்லை, ராம் தான் எங்களை காப்பாற்றினர். ராமும் நானும் சகோதரர்கள் என்று சொல்றாரு. அதன்பின் அம்ஜித் இறந்து போறாரு, 
தன்னால் ஒரு கலவரம் ஏற்பட்டு பலர் இறந்து போயிருக்கிறார்கள். முக்கியமாக தன் உயிர் நண்பன் தன் உயிரை காப்பாற்றி அவன் இறந்து விட்டான் என்று ராம் க்கு ஒரு குற்ற உணர்ச்சி. 
பின் அம்ஜித்தின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு காந்திய பார்க்க போறாரு. அங்க ராம் ஐ காட்டி, இவர் தான் நேற்று நடந்த கலவரத்தில் பலரை காப்பாற்றினார் என்று அறிமுகப்படுத்துறாங்க. அதற்கு காந்தி, “நீங்க ஒரு மகாத்மா தீய குணம் இல்லாமல் பலரது உயிரை காப்பாற்றியதால் நீங்க ஒரு மகாத்மா” என்று சொல்றாரு. இதனால் ராம் க்கு மேலும் தன்னுடைய மனம் இறுகுகிறது. பின் காந்தியை பற்றிய தவறான பிம்பம் ராமிற்கு உடைகிறது. 
மறுநாள் காந்தியை பார்த்து மன்னிப்பு கேட்க ஒரு பெட்டியில் துப்பாக்கியை வைத்து எடுத்துக்கொண்டு போறாரு.

அங்க காந்தி ஒரு அவசர கூட்டத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது அவரால் நின்று பேசமுடியவில்லை, என் வயதுக்கு ஒரு நிமிடம் என்பது பெரிய விஷயம் நான் பாகிஸ்தானில் இந்துக்களை காப்பாற்ற அங்கு பயணம் செல்லும் போது நிறைய பேசலாம் இப்போது வேண்டாம் னு காந்தி மறுத்துட்டு போறாரு. அங்க ஒர்த்தர் காந்தியிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக வந்து அவரை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். அவர்தான் பலருக்கும் தெரிந்த கோட்சே. அங்கிருந்து காந்தியோட உடலை கொண்டு போன பிறகு ராம் காந்தியின் செருப்பும் கண்ணாடியையும் கொண்டு வந்துடுறாரு.


DIRECTOR HINT

(காந்தி ராமிடம் சொன்ன அந்த பயணம் சில நாள் முன்பு ராமும் மைதிலியும் விமானத்தில் செல்லும் போது ராம் விமர்சனம் செய்த அதே பயணம் தான்.   (Ill’ walk to Pakistan and I save hindu- news paper) 

கோட்சே சுடும்போது உண்மையாகவே காந்தி 2 அடி தள்ளி விழுந்தாரு, அதற்க்கு காரணம் காந்தியோட வயதான உடல்நிலை இல்லை. அப்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மிக வேகமாக செயல்பட கூடியவை கனமானது, அதனால் தான் காந்தி கொஞ்சம் தள்ளி விழுந்தாரு, இந்த காட்சியை தத்ரூபமாக கமல்ஹாசன் பதிவு செய்திருப்பார்.
சரி கோட்சே காந்தியை கொல்லும்போது

ராம் கையிலும் துப்பாக்கி இருந்தது இல்லையா? பின் அவர் கோட்சே வை கொன்று இருக்கலாம் ல? 
ஆம், அதற்கு தான் ராம் பெட்டியை திறந்து துப்பாக்கியை எடுத்தார், ஆனால் ராம் மாறிவிட்டார், காந்தியின் வழியை பின்பற்ற தொடங்கி விட்டார் என்பதற்கு சான்று தான் அந்த காட்சி.
எதிரிக்கும் நல்லது செய், அஹிம்சையே மிகப்பெரிய ஆயுதம் என்ற கொள்கையை ராம் பின்பற்றி அதை செய்யாமல் விட்டு விட்டார் மற்றும் காந்தி இறந்த போது உண்மையாகவே காந்தியோட கண்ணாடியும் செருப்பும் காணமல் போனது, அது இன்று வரை கிடைக்கவே இல்லை.  ஒரு வேளை இந்த உண்மை தகவல் தான் ஹே ராம் உருவாகவும் அதில் சாகேத் ராம் என்ற கதாபாத்திரம் உருவாகவும் காரணமாக இருக்குமோ? யாருக்கு தெரியும் அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்..)
பின் நிகழ்கால கதையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தில் போராட்ட களமான போது ஒரு ட்ரைனேஜ் உள்ளே மருத்துவ குழுவுடன் இறக்கப்பட்ட வயதான ராம், என்ன பிரச்னை எதுக்காக இங்க இருக்கோம் னு ராம் கேக்கும்போது “இந்து முஸ்லீம் பிரச்னை” னு சொல்லும் போது “இன்னுமா?” னு கேட்பார் அதன் பின் இறந்து போறாரு.

DIRECTOR HINT

1946 ல் நடந்த இந்து முஸ்லீம் பிரச்னை இன்னுமா நடக்குது னு ஒரு sarcastic 
வசனத்த கொடுத்துட்டு போயிருக்காரு. இதில் என்ன ஆச்சர்யம் னா அந்த பிரச்னை இப்போ வரைக்கும் போயிட்டிருக்கு, இந்த கலவரத்தில் இவர்களை காப்பாற்றியது ஒரு முஸ்லீம் போலீஸ் (நாசர்)

பின் சாகேத் ராம்மின் இறுதி மரியாதை தருவதற்காக காந்தியின் கொல்லு பேரன் அவங்க வீட்டுக்கு வருவாரு, அதன் பின் தன்னுடைய தாத்தாவோட பொருட்களை காந்தியின் பேரனுக்கு காட்டுவாரு பேரன் ராம். அதன்பின் மகாத்மா வோட செருப்பும் கண்ணாடியையும் சாகேத் ராமின் பேரன் கையால் காந்தியின் பேரன் கையில் கொடுப்பாரு. இப்படி படம் முடிகிறது. 

DIRECTOR HINT

காந்தி பேரன் அவர் பெயரும் காந்தி என்றே இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இதில் வருபவர் காந்தியடிகளின் உண்மையான கொல்லு பேரன். உண்மையாகவே தொலைந்து போன காந்தியோட கண்ணாடியையும் செருப்பும் கற்பனை கதை கலந்த இந்த உண்மை கதையில் காந்தியின் குடும்பத்தில் கொண்டு சேர்த்து மிகப்பெரிய பிரம்மாண்டமாக புல்லரிக்க வெச்சிருக்கு இந்த காட்சி. ராமும் காந்தியும் மீண்டும் ஒரு சந்திப்பு 


                           


கதாபாத்திரங்கள் : 
இந்த படத்தில் சாகேத் ராமுடன் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே ஆனால் வரலாற்று சார்ந்து வரும் கதாபாத்திரங்கள் உண்மை. மேலும் கற்பனையாக எடுத்துக்கொள்ளப்படும் கதாபாத்திரங்கள் சிலவை உண்மை கதாபாத்திரத்தின் நெருங்கிய தொடர்பு உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த அனைவரும் அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். 
அதே போல அதுல்குல்கர்னி ஒரு மராட்டியர், ராணி முகர்சி ஒரு பெங்காள், ஷாருக் கான் ஒரு முஸ்லீம். கலவரத்தில் காப்பாற்றும் போலீஸ் ஒரு முஸ்லீம் அவர் நாசர். டெல்லியில் இந்து அமைப்பின் அடிதடி கூட்டத்தின் தலைவராக டெல்லி கணேஷ்,
மற்றும் கோட்சே கதாபாத்திரத்தில் வருபவர் கிட்டத்தட்ட கோட்சே போலத்தான் கதாபாத்திரம் தேர்வு செய்திருப்பார்கள், மற்றும் அதுல் குல்கர்னி ஒரு இந்து தீவிர அமைப்பில் ஒருவராக இருப்பார். இவருடைய முதல் அறிமுகத்தின் போது தாடி மீசை பொட்டு என்ற உருவத்தில் வருவார் இந்த கதாபாத்திரம் RSS  அமைப்பின் இரண்டாவது தலைவர் M.S.கோல்வாக்கர் என்பரின் உருவத்தை ஒன்றி இருக்கும்.  

பின் கொஞ்சம் நாள் கழித்து அதுல் குல்கர்னி தாடி மீசை எல்லாம் எடுத்து ஒரு தொப்பி போட்டு கொண்டு புதிய உருவத்தில் ராமை சந்திக்க வருவார். இந்த உருவமைப்பு  ஹிந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவரான வீர்சர்வாரகர் என்பவரின் அடையாளத்தை ஒன்றியே காணப்படும்.
இந்த இருவரும் எழுதிய புத்தகமும் தடை செய்யப்பட்டவை தான். BUNCH OF THOUGHTS –MS GOLWALKER  இது முழுக்க முழுக்க இந்துத்துவா மற்றும் பெருபான்மை நலனுக்காக எழுதப்பட்டவை. மற்றும் வீர் சர்வார்கார் எழுதிய INDIAN WAR OF INDEPENDENCE 1857 என்ற புத்தகமும் இந்துத்துவா சமந்தமானவை மற்றும் இவை இந்திய அரசியல் அமைப்பிற்கு புறம்பானது என்று இந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள். இந்த தடை செய்ப்பட்ட புத்தகம் அதாவது குல்கர்னியின் சிந்தனைதான் இந்த படத்தில் அட்டை பிரிக்காமல் ராம் படிக்கும் புத்தகம். மற்றும் அதுல் குல்கர்னி நடித்த அபயங்கர் கதாபாத்திரம். அதில் முதலில் நடித்தவர் மோகன் கோகலே. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் அவர் மாரடைப்பால் மரணமடைய அவரை வைத்து எடுத்தக் காட்சிகளை நீக்கிவிட்டு, அதுல் குல்கர்னியை நடிக்க வைத்தனர். அந்த கதாபாத்திரத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது என்பது கூடுதல் தகவல். 

மஹாபாரதமும் ஹே ராமும் 
மகாபாரதம் கதையை சில நுணுக்கங்களை கொண்டு தழுவி சென்று உள்ளார் கமல்ஹாசன். படத்தின் தலைப்பில் ஒரு வில் இருக்கும். இது ராம பானமாகவும் கருதலாம். இல்லை இந்த படத்தின் கதைக்கரு அம்பும் அம்பு எய்தவனும் என்ற பார்வையிலும் பார்க்கலாம். 
ராம் மகாராஷ்டிராவில் அரசருடன் சேர்ந்து கொண்டாடும் விழாவில் ராமர் வேடமிட்ட ஒருவன் ராவணனின் தலையில் அம்பு எய்தி நெருப்பால் கொளுத்துவார். பின் ராவணன் தலை கீழே விழும். இந்த காட்சியில் சாகேத் ராம் ராமாக தன்னை எண்ணி தன் மீசையை கர்வமாக முறுக்குவார்.
பின் அதுல் குல்கர்னி அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது ஆஞ்சநேயர் சாமி படம் முன்பு  ஒரு துப்பாக்கியை பார்சலை எடுத்து ஸ்ரீ ராம் மார்பில் மீது வைத்து பிரிப்பார். இதில் அதுல் குல்கர்னி ஆஞ்சநேயராக சிதாரிக்கப்பட்டு தன் மார்பை பிளந்து தன் முழு ஆசையையும் ராமிற்கு கொடுக்கிறார். இப்படி பல இடங்களில் மகாபாரதம் கதாபாத்திரத்தை தழுவி வந்தது இந்த ஹே ராம்.  

சில அடையாள குறியீடுகள் : 
ஸ்ரீ ராம் அதாவது அதுல் குல்கர்னியும் ராம் ம் ஒரு இடத்தில நின்று பேசுவார்கள் அங்கு ஒரு சுவரில் KORES  என்று எழுதப்பட்டிருக்கும் அந்த சுவற்றுக்கு சில நொடிகள் காட்சி அப்படியே இருக்கும். ஒரு புறம் ஸ்ரீ ராம் அவனோட வார்த்தைகளால ராம் அ மாத்திட்டு வருவாரு. KORES என்பது தன் சிந்தனைகளை மற்றவருக்கு சொல்லி அவரை அப்படியே நம்பி தங்கள் வாழ்கையோடு ஏற்றுக் கொள்ள செய்வது.அதாவது Sales Represented or Ambassador னும் சொல்லாம். 
மகாராஷ்டிராவில் ராம் சோமபானம் குடித்து விட்டு ஸ்ரீ ராம் பின்னாடி தொடர்ந்து நடந்து செல்வார். அப்போது ராம் சேற்றில் நடந்து சென்று பின் கருப்பு வெள்ளை தரையில் நடந்து சென்று அந்த இந்து அமைப்பு கூட்டத்திற்கு செல்வார். இந்த காட்சியில் ராம் மனநிலை சேற்றில் தொடங்கி ஒரு சதுரங்க ஆட்டத்தில் கடந்து கிட்டத்தட்ட ஒரு முக்கிய முடிவு எடுக்கும் தருணத்தில் இருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. மற்றும் சோமபானம் அருந்திவிட்டு தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் ராமிற்கு முஹஞ்சதரோ மற்றும் பாலைவனத்திற்கு என சில கம்யூட்டர் காட்சிகள் வந்து செல்லும் இதில் கமல்ஹாசன் தான் முன்பு செய்த தொல்பொருள் ஆராய்ச்சி காரணமாக இது வந்திருக்கலாம். அதே நேரம் தன் மனைவி அவர் கண்ணுக்கு துப்பாக்கியாக தெரிவார். இந்த காட்சி தான் செய்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சி வேலைக்கு பின் தான் வழக்கை துப்பாக்கி, ரத்தம் என மாறிவிட்டதை உணர்த்துகிறது. மேலும் இந்த காட்சிக்கு முன்பு தான் காந்தியை கொலை செய்வதற்கு ராம் தேர்வு செய்யப்பட்டு தனக்கு தேவையான துப்பாக்கியை எடுப்பார். இதன் காரணமாகவும் தான் அருந்திய மது காரணமாகவும் இந்த காட்சி தெரிந்திருக்கும். 

ஸ்ரீ ராம் இறந்ததுக்கு பின் தன் மனைவி யுடன் தமிழ் நாட்டில் இருக்கும்போது ராம் கனவில் ஒரு சூறாவளியின் பொது ராம் துப்பாக்கி பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பார். இந்த காட்சி பெரும் ஆபத்தே வந்தாலும் தான் நினைத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.மற்றொரு காட்சியில் ஸ்வஸ்திக் சின்னம்,தாமரை என்று சில காட்சி வந்து செல்லும், இந்த காட்சியில் ஸ்வஸ்திக் சின்னம் உருமாறி தாமரையாக மாறும். ஹிட்லர் சின்னம் ஸ்வஸ்திக் சின்னம், பாசிசத்தை குறிக்கும் உலகம் அறிந்த சின்னம் அது. தாமரை என்னவென்று பலருக்கும் தெரிந்திருக்கும். அதே போல் கமல்ஹாசன் அவர்களுக்கும் தெரிந்திருக்க கூடும். அப்படி இல்லையென்றால் இந்துத்துவா குறியீடு தாமரை என்றும் பொருள்படலாம். 

மேலும் இந்த படத்தில் முதல் பாதியில் ராமின் கதாபாத்திரத்தையும் யானையும் இணைத்து ஒரு METOPHER யுத்தியை காட்சிப்படுத்தியுள்ளார். கொல்கத்தாவில் தன் மனைவியை கொன்றவர்கள் மீதும் மற்றும் அவர்களின் மதம் மேலும் உள்ள கோவத்தால் வெறி பிடித்தது போல வீதியில் முஸ்லீம்களை கொன்று மறுநாள் வரும்போது ஒரு யானை வளர்த்த பாகன் இறந்து இருப்பார்.  யாருமே இல்லாமல் அந்த யானை அந்த உடலுக்கு அருகே நின்றிருக்கும். இதில் யானையாக ராமையும் பாகனாக அவரது மனைவியும் குறியீடாக வைத்திருப்பார். பின் அதே யானை மதம் பிடித்து தன் பாகனை இல்லாமல் ஒரு குச்சியை பிடித்து கொண்டு வீதியில் ஓடும். மக்கள் பயந்து ஓடுவார்கள். இந்த காட்சிக்கு முன்பு அதுல் குல்கர்னி ராமிற்கு தவறான சிந்தனைகளை கொடுத்து ஒரு குழப்ப நிலையில் வைத்திருப்பார்.  இதில் யானைக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் மதம் பிடித்து விட்டால் தன்னை மறந்து விடும் என்று சொல்லிருப்பார். 
பின் தமிழ்நாட்டில் ஒரு யானை, காலில் சங்கிலியால் கட்டி போட்டு சாந்தமாக இருக்கும். அதே நேரத்தில் ராம் சாந்தமான நிலையில் மறுமணம் செய்து கொள்ள சென்று கொண்டிருப்பார். இந்த காட்சிக்கு தமிழ் நாட்டுக்கு வரும் போது பின்னணி இசையில் ஒரு பாடல் போகும் அந்த பாடல் என்னன்னா, மதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை, விதம் கொண்டு மறைகள் போற்றும், மதம் கொண்ட வேழம் போல திரிகிறேன்.. னு ஒரு பாடல் போகும்.  இந்த பாடல் வரிகள் மூலம் ராமுடன் யானையையும் ஒப்பிட்டு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 


உளவியல் ரீதியாக இந்த படம் :

POST TRAUMATIC STRESS DISORDER அப்படினா ஒரு கொடூரமான ஒரு நிகழ்வு நம் கண் முன்னே நடந்தாலோ, அல்லது அந்த நிகழ்வில் நாம் ஈடுபட்டாலோ இந்த மன அழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த படத்தில் எந்தவொரு காட்சியிலும் இந்த மனநோய் பற்றி ஒரு காட்சியிலும் சொல்லவில்லை, ஆனால் தன் முதல் மனைவி தன் கண்முன்னே இறந்த பின் ராமிற்கு பல காட்சிகள் அதாவது ILLUSIONS  கண்முன்னே வந்து போகும். அது அவர் மனநிலையை ஒரு நிலையில் வைத்திருக்க முடியாது.

இந்த அறிகுறிகளை வைத்து பார்க்கும்போது  POST TRAUMATIC STRESS DISORDER  னு அறிய முடிகிறது. இந்த மனநோய் எப்படி குணமாகும் என்றால் தன் குழப்பமான மனநிலைக்கு ஒரு தீர்வு கிடைத்தால் இந்த மனநோய் சரியாகிவிடும். 

இப்படிதான் ராம் உடைய மனநிலை குழப்பத்திற்கு காந்தியின் மரணம் ஒரு தீர்வாக அமைந்தது. காந்தியின் மரணம் ராமிற்கு வருத்தம் அளித்தாலும் ராமுடைய மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்தது. அதே போல் தான் அவரது நண்பர் அம்ஜித்கான் மரணமும்.  
இந்த பகுதி ராம் உடைய மனநிலை மற்றும் அவருக்கு தோன்றிய காட்சிகளை வைத்து பார்த்தது. இந்த பகுதி படத்தை பொறுத்தவரை பொய்யானதாகவும் இருக்கலாம். ஆனால் இவை ஒரு கூடுதல் தகவல். 

இந்த படம் ஏன் தோல்வி? 
இந்த படம் பொருளாதார ரீதியாக பெரும் தோல்வியே பெற்றது. காரணம் சாதாரண மக்களுக்கு இந்த படம் புரியவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை, ஏன் உயிருக்கு உயிரான கமல்ஹாசன் ரசிகர்களுக்கே இந்த படம் பெரும் ஏமாற்றம். காரணம், இந்தியாவில் 1946 லிருந்து தற்போதைய அரசியல் நிகழ்வுகள் வரை ஓரளவு தெரிந்திருந்தால் மற்றும் சில அரசியல் முகங்களையும் தெரிந்திருந்தால் எளிமையாக புரியும். மேலும் இந்த படத்தில் மொத்தம் 11 மொழிகள் பேசப்பட்டிருக்கும். சகட்டு மேனிக்கு திடீர் திடீர்னு ஏதேதோ மொழியில் பேசுறாங்க, ஏன் தமிழ் ல பேசுறன்னு  அய்யங்கார் பாஷை பேசுனதும் பாமரனுக்கு புரியலன்னு பலர் புலம்புனதும் உண்மை.  குடும்பங்களின் ஆதரவை மொத்தமாக இழந்தது, காரணம் முத்தக்காட்சி இருந்தாலே அம்மா அப்பா நம்ம கண்ண மூடுன காலத்துல மொத்தமாவே காட்டுனா தியேட்டர் பக்கம் கூட கூட்டிட்டு போக மாட்டாங்க. எதார்த்தமான உண்மைய வெளிப்படையான அந்தரங்கத்தை காட்சிப்படுத்துனது குடும்பங்களின் ஆதரவை பெறுவதில் தோல்வியடைந்தது. 
ரசிகர்களுக்காக படம் எடுக்கணும் ன்றது சாதாரண இயக்குனரின் கடமை. ஆனால் கமல்ஹாசன் தன் ரசிகனை இப்படியும் படம் பார்க்க பழக வேண்டும் என்ற நோக்கத்தில் பல முயற்சிகளை கொடுத்து வருகிறார். அதன் விளைவுகள் தான் அன்றிலிருந்து விக்ரம்,ஆளவந்தான், அன்பே சிவம், உத்தமவில்லன், விஸ்வரூபம் னு கொண்டு போயிட்டு இருக்காரு. அது எளிமையாக புரிந்து விடுவதில்லை அதற்கு கொஞ்சம் ஆண்டு தேவைப்படுகிறது.   

படத்தில் ஒளிப்பதிவு, திரு  அப்போதைய தினத்தில் இந்த அளவு ஒளிப்பதிவு என்பது பாராட்டக்குரியது,  வடஇந்தியா மற்றும் தென் இந்தியா என்ற வேறுபாடுகள் ஒளிப்பதிவு மூலம் அழகு சேர்த்திருக்கிறது. பெரும்பாலான இரவு நேர காட்சிகளின் color & lighting அருமையான காட்சியாக்கப்படுள்ளது. குறிப்பாக நீ பார்த்த பார்வைகொரு என்ற பாடல் காட்சி தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்தது.
மேலும் இந்த படத்தில் படப்பிடிப்பின் போதே ஒலிப்பதிவும் செய்திருக்கின்றனர். Live Audio Record செய்து படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது சிறப்பு
கலை வடிவம், இந்த படத்தில் மிகப்பெரிய சவாலான வேலைனா அது art work தான், சாபு சிரில் சிந்து சமவெளி இடம் வடிவமைப்பு தொடங்கி சாகேத் ராம் வீடு, கலவரத்தில் இருக்கும் கொல்கத்தா, சோடா கம்பெனி னு நிறைய இடங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டது. 

கம்யூட்டர் கிராபிக்ஸ், Pyschology Film போன்ற முறையில் இருந்த சில காட்சிகள் கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் சில Illusio. உருவாக்கம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ராம் ஒரு சூறாவளிக்கு இடையே துப்பாக்கி பயிற்சி எடுப்பது அருமை. 
இசை, ஹேராம் படத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்தது இப்படத்தின் இசை, முதலில் ஹேராம் படத்திற்கு எல் சுப்ரமணியன் என்பவரால் பாடல்களும், இசையும் வடிவமைக்கப்பட்டு படபிடிப்பும் நடந்து முடிந்தது, சம்பளம் காரணமாக எல். சுப்ரமணியன் விலகினார். பின் பாடல் குறித்த காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட வேண்டும், என்ற சூழலில் கமலும் அவரது குழுவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்க, இசைஞானி இளையராஜாவை கரங்களை தேடினார் கமல்ஹாசன்.  எல்.சுப்பிரமணியன் இசையமைத்த பாடல்களை ஒரு முறை கூட கேட்காத இளையராஜா, படமாக்கப்பட்ட காட்சிகளுக்கேற்ப இசையமைத்து , வரிகள் , காட்சிகள் எதுவும் மாற்றாமல் இசையமைத்தது என்பது வியக்கத்தக்கது. அதனால் தான் இளையராஜாவுக்கும் கமல்ஹாசனுக்கும் ஒரு Chemistry Work Out நடந்து கொண்டே இருக்கிறது. 
குறிப்பாக இந்த படத்தில் 'இசையில் தொடங்குதம்மா' என்ற பாடல் கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கும். இன்றும் காதலின் சாரம் மாறாமல் அதே தன்மையுடன் அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் இருந்து வருகிறது. 


சர்ச்சைகள் -
ஹேராம் படம் வெளியாவதற்கு முன், காந்தியை இந்தப்படம் விமர்சிப்பதாகக் கூறி, காங்கிரஸார் இந்தப் படத்தை எதிர்த்தனர். வட இந்தியாவின் பல இடங்களில் ஹேராம் வெளியான திரையரங்குகளின் முன்பு காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். சில தினங்களில் சர்ச்சை முழுவதும் மாறியது.காங்கிரஸ் கட்சியினர் மனம் மாற இந்துத்துவா அமைப்பினர் படத்தை எதிர்த்தனர். ஹிட்லரின் நாஜிப்படைகளுக்கு இணையாக ஆர்எஸ்.எஸ். இயக்கத்தை கமல் படத்தில் காட்டியிருந்தது மேலும் பிரச்சினை உருவாக்கியது. இந்த படம் வெளிவந்த வேளையில் பல சிக்கல்களை மாநில அரசு, மத்திய அரசு மற்றுப் இதர அமைப்பின் நெருக்கடி சந்தித்தது.  இன்று போல விமர்சனம் ஒரு படத்திற்கு அன்று கை கொடுக்கவில்லை.

இந்த படம் ஏன் உலகத்தரம் வாய்ந்தது : 
இன்னிக்கு பலருக்கு இந்திய சுதந்திரம் அடைந்தது, காந்தியை சுட்டு கொன்னார். அப்படி தட்டையான பார்வையில் மட்டுமே தெரியும். பலருக்கும் இந்தியாவில் அரசியல் உருவாக்கம், சுதந்திரம் விளைவு, பெருபான்மை பிரச்சனை, சாதி மத கலவரம் என பல விஷயங்கள் தெரியாமல் போகிறது. இதை மக்களுக்கு அவ்வப்போது சொல்ல வேண்டும், சமூகம் குறித்த பார்வை மாறுபட வேண்டும்  என்ற எண்ணம் கமல்ஹாசனுக்கு அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. இந்த எண்ணங்களை மக்களுக்கு எளிதாக கொண்டு செல்ல வேண்டும் என்றால் சினிமா ஒன்று தான் மிகப்பெரிய ஆயுதம் என எண்ணி சினிமாவை கையில் எடுத்து தேவைப்படும் சிந்தனைகளை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படம் கொடுத்து வருகிறார் கமல்ஹாசன். அதனால் தான் தேவர் மகன், அன்பே சிவம், ஹே ராம், ஆளவந்தான் என்ற படம் மட்டுமல்லாமல் தான் இனைந்து பணியாற்றும் இயக்குனருக்கும் அதே வலியுறுத்தி தெனாலி, உத்தம வில்லன், சிகப்பு ரோஜாக்கள் என பல தளங்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்களையும் எண்ணங்களையும் கொடுத்து வருகிறார். 
அப்படி கொடுக்கப்பட்டது தான் இந்த ஹே ராம் படம் , இந்த படம் நம் இந்தியாவின் அரசியல் உருவாக்கமும் தற்போதைய நிலையையும் , இந்த நிலைக்கான காரணியையும் சொல்லி விட்டு செல்கிறது. படம் வந்து பல ஆண்டு ஆனாலும் இன்று இந்தப் படத்தை இன்றைய தலைமுறைகள் கொண்டாடியே வருகின்றனர். திரைக்கதையில் எப்படி இவ்வாறு கருத்துக்களையும், வசனங்களில் எப்படி இப்படி அரசியலை சாட முடியும், குறியீடுகளில் எப்படி இப்படி அர்த்தங்களை கொடுக்க முடியும் என்று யோசித்தால் நமக்கு கிடைப்பது ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் தான். 

முதல் காட்சியில் சாகேத் ராம் பற்றி பேரன் சாகேத் ராம் ஒரு தகவலை டாக்டரிடம் சொல்லுவார். அதற்கு டாக்டர் மகாத்மா பற்றி ஒரு தகவலை சொல்லுவார் 
அவை,

தொலைந்து போன காந்தியின் செருப்பை, கற்பனையாக கண்டுபிடித்து அதை கற்பனை ராம் கையால் உண்மையான காந்தியின் குடும்பத்தில் கொண்டு சேர்த்தது மிகப்பெரிய பாராட்டக்குரிய செயல், கற்பனை என்றாலும் அதில் பிரம்மிப்பு வைத்திருக்கிறார். பிரம்மாண்டம் என்பது பொருட்செலவில் எடுப்பது இல்லை. கதையில் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட கதையையும் ராமுடன் பயணித்த பயணத்தையும் அடுத்த தலைமுறைக்கு எழுத்து வடிவில் கொண்டு செல்வதில் பெருமையடைகிறேன்


குறிப்பு :

இந்த கட்டுரையில் பல இடங்கள் பல குறியீடுகள் குறிப்பிடாமல் இருக்கலாம் , காரணம் ஹேராம் படத்தை பற்றி எழுத வேண்டுமென்றால் ஒரு புத்தகமே தேவைப்படும். பல ஆயிரம் குறியீடுகள் மற்றும் வரலாற்று கதைகள் இந்த படத்தில் உள்ளது. இந்த கட்டுரையில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும். உங்களுக்கு தெரிந்த தகவலையும் இதில் பகிரலாம். ஹேராமின் திரைக்கதை புவியரசன்  எழுத்தில் வெளியானது தமிழில் இதுவரை வெளிவந்ததில் மிகச்சிறந்த திரைக்கதை புத்தகம். படத்திலும் சரி இந்த கட்டுரையிலும் சரி நாம் தவறவிட்ட பல விஷயங்கள் இதில் படித்து கொள்ளலாம்.
உங்கள் நேரம் ஒதுக்கி படித்ததற்கு நன்றி ! 

என் திரைத்துறை கல்வியில் பேராசிரியராக இருக்கும் உலக நாயகன் அவர்களுக்கு நன்றி !!  




விஜய் தேசிங் 
9884112420
vijaydesing555@gmail.com

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...