தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்கள் என்று பார்த்தால் நிறைய இருக்கு ஆனால் அதெல்லாம் பாலுமகேந்திரா , பாலசந்தர், பாரதிராஜா இருந்த காலத்தில் தான் அதன்பிறகு மணிரத்தினம், கமல்ஹாசன் னு அந்த வரிசையில இடம் பிடித்தார்கள். அதன்பிறகு சங்கர், கதிர், செல்வராகவன் மூலமாக கமர்ஷியலான நல்ல படங்களும் வர ஆரம்பித்தது. கொஞ்சம் நாள் கழித்து சங்கர் பொருளாத ரீதியான படங்களிலும், மணிரத்னம் படங்கள் விமர்சனங்களையும், தோல்விகளையுமே பார்த்து வந்தது. ஆனால் தற்போது வர திரைப்படங்கள் புது இயக்குனர்களினால் புத்துணர்ச்சி பெற்று உள்ளது. இந்த வரிசையில தன்னோட கதை நடையிலும் சரி தன்னோட எண்ண கருத்துகளிலும் சரி மாறாமல் திரைப்படத்தை கொடுத்து வருபவர் செல்வராகவன், மிக குறைவான படங்களையே இயக்கி வந்த அவருக்கு திரைப்படம் அவர் நினைத்தது போல் வரவேற்பை பெறவில்லை. ரிலீஸ் அன்று அவரின் படங்கள் பெருவாரியான மக்களுக்கு பிடிக்காமலும் புரியாமலும் இருந்தது,(இரண்டாம் உலகம்).
பல எதிர்பார்ப்பையும் எதிர்ப்புகளையும் கடந்து வெளியானது தான் ஆயிரத்தில் ஒருவன். “உன் மேல ஆச தான்” என்ற பாடல் தனுஷ் பாடி வெளி வந்து பெரிய ஹிட்டானது. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தலைப்பையே இந்த படமும் கொண்டிருந்தது. அதன்படியே இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகளும் அதிகமானது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்தது. பல விமர்சனங்கள் பல பிரச்சனைகளையே இந்த படம் செல்வராகவனுக்கு கொடுத்தது.
இதற்கு காரணம் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்பது தான்.
அவர்கள் எதிர்பார்த்த பாகுபலி கமர்ஷியல் அன்று அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்றைய நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காரணம் திரைக்கதையை மெல்ல மெல்ல ரசிகர்களுக்கு புரிய வருகிறது. இந்த படத்தில் செல்வராகவன் கொடுத்துள்ள மெனக்கெடல்கள் தெரியவருகிறது. அப்படியானால் இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று இல்லை. அவர்களுக்கு புரியவில்லை என்பதே உண்மை.
திரைப்படம் கதை :
படத்தின் முதல் காட்சியில் தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் ஒரு தெருக்கூத்து இடம்பெறும். அது சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த பிரச்சனைகளை பேசுவது போல் கதை அமைந்திருக்கும், அந்த தெருக்கூத்தில் சோழ மன்னர் ஒருவர் தன் குழந்தையை ஒரு மந்திரியாரிடம் கொடுத்து ‘இனி நீ இவனை வளர்க்க வேண்டும்’ சொல்லி போருக்கு சென்று விடுவது போல் காட்சி அமைந்திருக்கும்.
(இந்த தெருக்கூத்து கதை இன்றும் சில கிராமங்களில் அரங்கேறி வருகிறது என்பது கூடுதல் தகவல்)
தஞ்சை கிபி 1279 சோழர்களின் கடைசி மன்னன் ஆட்சியின் போது, பாண்டியர்களின் ராஜ்யம் உயர்ந்து இருந்தது. சோழ நாட்டில் இருந்த அனைத்து செல்வங்களையும் வளங்களையும் பாண்டியர்கள் எடுத்து செல்கின்றனர். நாடே தீப்பற்றி எரிகிறது. ஒரு புறம் தன் நாட்டு மக்களும், தன் மகனான இளவரசரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும், சோழர் வம்சம் அழியாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு சித்தரிடம் தன் குழந்தையை வளர்க்க வேண்டி அனுப்பி விடுகிறார் சோழ மன்னன், போகும்போது பாண்டியர்களின் குல தெய்வ சிலையான மீன் தலை கொண்ட ஒரு சிலையையும் எடுத்து செல்கின்றனர் சோழர்கள்.
தஞ்சையிலிருந்து புறப்பட்ட சோழர்கள் வியட்நாம் அருகே இருக்கும் மிங்ஹூ ஆ- தீவுக்கு சென்றடைகிறார்கள்.
(சோழர்களின் செல்வங்கள் பறிபோனதால் கடல் வழி பயணம் இல்லாமல் இருக்கலாம், அதனால் தஞ்சாவூரிலிருந்து கடல் ஒட்டியே வியட்நாம் வரை பயணம் செய்திருப்பார்கள் என்பது கூடுதல் தகவல்)
அதுமட்டுமல்லாமல் பாண்டியர்கள் அவர்களை பின் தொடரக்கூடாது என்பதற்காக சாதாரணமாக யாரும் கடந்து வராத படி 7 பொறிகளையும் அமைத்து விட்டு செல்கின்றனர்.
(ஜெல்லி பிஷ், கட்டு வாசிகள் ,செவ்விந்தியர்கள், பாம்புகள், புதைமணல்கள், பசி,நகரம்)
இந்த படத்தில் ஒரு சில குகை ஓவியங்கள் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் அந்த குகை ஓவியத்தில், சோழ தேசத்திலிருந்து அதாவது தஞ்சாவூரிலிருந்து தூதுவன் வருவான். அவன் சோழ மக்களால் தாக்கபட்டு ஒரு குழந்தையின் கண்ணீர் துடைப்பான் அப்போது மழை பொழியும், அவன் சோழ மக்களை மீட்டு சோழ தேசம் செல்வான் என்பது வரையப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தையே நம்பி அந்த சோழ மக்கள் 7௦௦ வருடங்களாக காத்திருப்பார்கள்.
சோழ மக்கள் ஒரு பெரும் மலையை குடைந்து அந்த மலைக்குள் ஒரு நகரத்தையே உருவாக்கி வாழ்ந்திருப்பார்கள், வறுமையிலும் பசியிலும் அவதியடைந்து இருப்பார்கள். ஓரு காட்சியில் ஒரு தாய் தன் பிள்ளையுடன் மன்னன் முன் வந்து தன் முலையை அழுத்தி காட்டுவார், அதில் பால் வராமல் வறட்சியில் ரத்தம் வரும், அந்த அளவு அவர்களின் வறுமை ஓங்கி இருக்கும்.
அவர்கள் நிலைப்பற்றி சோழ மன்னன் (பார்த்திபன்) ஒரு பாடலில் கூறுவார், (புலி கறி பொறித்த சோழ மாந்தர்கள் எலி கறி கொரிப்பதுவோ, நெல் ஆடிய நிலம் எங்கே, சொல் ஆடிய அவை எங்கே, இது பிள்ளையின் கதறல் ஒரு பேரரசனின் புலம்பல்)
காணாமல் போன சோழ இளவரசன் போன வழித்தடத்தை பின் தொடர்ந்த ஒரு பாண்டிய தளபதி அந்த 7 பொறிகளை பற்றியும் அந்த பயனத்தை பற்றியும் ஒரு ஓலை சுவடியில் எழுதிருப்பார். இதை பின்பற்றியே இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் அதாவது ஆண்ட்ரியா வின் அப்பா (பிரதாப்) அங்கு சென்று காணமல் போய் விடுகிறார்.
அவரை தேடி போவதற்கு இந்திய அரசு ஒரு குழுவை உருவாக்குகிறது. அவரை கண்டுப்பிடிக்க இந்த குழுவும் அந்த ஓலை சுவடியையே பின்பற்றுகிறார்கள். அந்த ஆராய்ச்சி குழுவுடன் கூலியாக இணைகிறார் கார்த்தி.
(DIRECTOR HINT - யூனியன் மினிஸ்டர் பெயர் வீர பாண்டியன்-பாண்டிய குடும்பத்தினர் )
இந்த தடைகளை கடந்து ஆண்ட்ரியா, ரீமாசென், கார்த்தி சோழர்களிடம் மாட்டி கொள்கின்றனர். அங்கு ரீமாசென் நான்தான் தூதுவன், சோழ தேசத்தில் இருந்து வந்துள்ளேன் என்று கூறுகிறார். ஆனால் அவர் ஒரு பாண்டிய வம்சத்தை சேர்ந்த ஒரு பெண். சிறு வயதில் இருந்தே சோழர்கள் எடுத்து சென்ற தங்கள் வம்சத்தின் குல தெய்வ சிலையை மீட்க வேண்டும் என்ற எண்ணத்திலே வாழ்பவர். அதற்காகவே போர்த்திறன்,மந்திர தந்திரங்கள் போன்றவையெல்லாம் தெரிந்து வளர்கிறார். இந்திய ஆராய்ச்சி குழுவில் உள்ள ரீமாசன் உட்பட ஒன்பது பெரும் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று ஒரு காட்சியில் கூறுவார்.
(DIRECTOR HINT : படத்தின் முதல் காட்சியில் சோழ அரசர் பாண்டியர்களின் குல தெய்வ சிலை மீது ஒரு வெறுப்புடன் துப்புவார். அதே சிலைய ரீமாசென் பாக்கும்போது கண்ணீர் விட்டு தொடைத்து அழுவர்).
ஒரு கட்டத்தில் ரீமாசென் தன் குழுவை வர சொல்லிவிட்டு சோழர்களை ஏமாற்றி செல்கிறார், ஊரே பெரும் சோகத்தில் மூழ்கி ஒப்பாரி விட்டு அழுவார்கள் (அந்த காட்சி சிலிர்க்க வைக்கும்)
இந்த ஏமாற்றத்தை தன் மக்களுக்கு அளித்து விட்டேன் என்ற சோகத்தில் பார்த்திபனும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பார். இதை பார்த்து அழும் கார்தியின் மீது சோழர்களின் கோபம் பாய்ந்து கார்த்தி தாக்கப்படுவார்.
பின் பார்த்திபனின் மகனை தூக்குவார். அப்போது மழை பெய்யும், அந்த குகை ஓவியத்தில் இருந்தவை நடந்தது. 7௦௦ ஆண்டுகளாக வாழ்ந்து வந்த சித்தர் தன் சக்திகளை கார்த்தியிடம் அளித்து விட்டு அவரும் இறந்து விடுவார். பின் கார்த்தி தான் தூதுவன் என சோழர்கள் அறிந்து தலை வணங்குவார்கள்.
பலமுறை கார்த்தி மரணத்திடம் இருந்து தப்புவார். பாம்பு தன் காலில் கொத்தும் போதும், செவ்விந்தியர்கள் கார்த்தியை கொல்ல வரும்போதும், புதை மணலில் கார்த்தி விழும்போதும், ரீமாசென் துப்பாக்கியால் இரண்டு முறை சுடும்போதும், பார்த்திபன் முன்பு தீயில் இறக்கிவிடும்போதும், மைதானத்தில் மரண சண்டையிலும் அவர் மரணத்திடமிருந்து தப்புவார். காரணம் இவர்தான் தூதுவன் என்று ஆரம்பத்திலிருந்து திரைக்கதை மெல்ல மெல்ல உணர்த்தி வரும்.
(DIRECTOR HINT : படத்தின் ஆரம்பத்திலே கார்த்தியின் முதுகில் சோழர்களின் சின்னமான புலி பச்சை குத்தப்பட்டிருக்கும், அது எதார்த்தமாக அவர் போட்டாலும், அதன் அர்த்தம் படத்தின் இரண்டாம் பாகத்தில் தெரியவருகிறது)
அதன் பின் பாண்டியர்கள் போரில் வெற்றிப்பெற்று சிலையையும் மீட்பார்கள். மன்னருடன் சேர்த்து சிலரை அகதியாக கொண்டு செல்ல முடிவு செய்து இருப்பார்கள்.
அந்த அகதி முகாமில், கடல் தாண்டி சோழ தேசம் செல்ல வேண்டிய நிலையில் அகதிகளாக பிடித்து வைக்கப்பட்ட பெண்களை, இராணுவ வீரர் உடை அணிந்த சிலர், நிர்வாணப்படுத்தி முகாமில் கற்பழிப்பார்கள், சிலர் கொல்லப்படுகிறார்கள் கடைசியில் தலைவன் தாக்கப்படுகிறான்.
அந்த நேரத்தில் சோழ இளவரசன் தப்பி செல்கிறான். அவனை தொடர்ந்து தூதுவனான கார்த்தியும் செல்கிறான். பின் சிறிது நேரத்திற்கு பின் பார்த்திபன் தவழ்ந்து கடற்கரை நோக்கி செல்கிறார். அங்கு ‘’சோழ தேசம் செல்ல போகிறோம் வாரும் மன்னரே வாரும்’’ என்ற அசரீரி யை தொடர்ந்து கடற்கரையிலே விழுந்து விடுகிறார்.
பின் உயிருடன் இருக்கும் சோழர்கள் தன் மன்னரை தூக்கி கொண்டு கடலில் இறங்குவார்கள். அதன்பின் இளவரசரை தூக்கி கொண்டு தூதுவனான கார்த்தி சோழ தேசம் நோக்கி செல்கிறார். சோழன் பயணம் தொடரும் என படம் முடிகிறது.
இந்த காட்சி இலங்கை அகதி முகாமில் நடைபெற்ற சில நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. படத்தில் காட்டப்படும் புலி சின்னம், தாய் தேசம் அழைத்து செல்கிறேன் என்று ஏமாற்றப்படும் மக்கள், தூதுவன் என்று சொல்லி செய்த துரோகம் ஈழ தேசம் வேண்டிய மக்களை கொலை செய்ததையும் பெண்கள் கற்பழிக்கப்பட்டதையும் மக்கள் சுடப்பட்டதையும், காட்சிப்படுத்திருப்பார். தலைவன் இறந்து விட்டான் , உயிருடன் இருக்கிறார் தலைவனின் பயணம் தொடரும் என்ற நம்பிக்கைகள் இன்னும் சரியான விளக்கமில்லாத கேள்வியையும் தெரிந்தோ தெரியாமலோ காட்சி அமைத்துள்ளார் இயக்குனர்.
இந்த படத்தில் சிவன் மற்றும் சிவ வழிபாடு அதிகமாகவே காட்சிபடுத்தப்படிருக்கும். சோழர்கள் சிவ வழிபாடு செய்ததை தெரியப்படுதிருக்காங்க. சோழ மக்கள் வாழும் இடத்தில் சிவலிங்க சிலையாகட்டும், உடைந்து போன நகரங்களில் இருக்கும் சிவலிங்கம், 7 பொறிகளில் ஒரு பொறியான பாம்பு ஆகட்டும், புதை மணலில் இருந்து தப்பிக்க நடராஜர் நிழலாகட்டும், கோவத்தில் பார்த்திபன் ஆடும் சிவதண்டவமாகட்டும் பார்த்திபனை தூக்கி கடலில் இறங்கும்போது மக்கள் திருவாசகம் பாடி கொண்டு இறங்குவதாகட்டும் னு கட்சிக்கு காட்சி சிவ வழிபாடு குறியீடுகளை வைத்திருக்காங்க.
இந்த படத்தில் சிறப்பான மன்னராட்சியை அழகா விவரித்திருப்பார்கள். செல்வம் செழிப்பும் இருப்பது மட்டும் நல்ல மன்னராட்சி இல்லை, நல்ல குடி மக்கள் இருப்பது தான் நல்ல மன்னராட்சி என்று பல இடங்களில் காட்சியின் மூலம் சொல்லிருப்பாங்க.
மன்னர் வருகையின் போது தேவாராட்டம் ஆடும்போதும், மன்னரை வரவேற்கும் முறையும், மன்னரின் வார்த்தைக்கு கட்டுப்படுவதும், பொது மக்கள் எந்த ஒரு தடையும் இல்லாமல் நேரடியாக மன்னரிடம் பேசுவதும் சோழ தேசம் செல்ல முடியாமல் வருந்தும் மன்னரை தேற்றுவதும், போரில் மன்னனின் உயிருக்காக இறப்பதும், சிவப்பு நிற செவ்விந்திய காவலாளி தலைவன் தான் இறக்கும்போது , சோழ மன்னன் இருக்கும் திசையை பார்த்து “சோழ பதாகையே வாழ்க” என்று சொல்லி சாவதும், மன்னன் இறக்கும்போது தலையில் தூக்கி கடலில் இறங்கும்போதும் மக்களின் உயர்வான மனதையும், மன்னர் மீது வைத்திருக்கும் மரியாதையும் இந்த படம் தெளிவுப்படுத்துகிறது.
இந்த படத்தில் செல்வராகவன் METAPHER என்ற யுக்தியை கையாண்டுள்ளதால் பெரும்பாலான கதையோட்டம் காட்சிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. வசங்களை தவிர்த்ததால் நம் மக்களுக்கு சில இடங்களில் புரியாமல் போனது. என்ன செய்வது? நம் மக்கள் வசனங்களிலே வாழ்ந்தவர்களாச்சே!
இப்படி ஒரு பிரமிப்புமிக்க ஒரு இதிகாசத்தை படைத்த செல்வராகவனை ரசிகர்கள் அன்று கை விட்டாலும் இன்று அவர் படம் என்றால் அதற்கு ஒரு வரவேற்பு உள்ளது. இந்த படம் ஒளிப்பதிவு ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராகவும் நேர்த்தியாகவும் ராம்ஜி கொடுத்திருப்பார். குறிப்பாக சோழ மக்களை காட்டும்போது உலகத்தரம், கப்பல் தளம், உடைந்த நகரம், சொழமக்கள் வாழ்ந்த அந்த மாலை குகை போன்ற ஆர்ட் ஒர்க் சிறப்பு. 3௦ கோடியில் இப்படி ஒரு கதைக்களமும், தமிழர் செய்த பயணத்தையும் தமிழரின் வரலாறும் காட்டிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை காட்டிலும் இன்று பாகுபலியை கொண்டாடுவது வருத்தம். எந்த அளவு காட்சி உலகத்தரத்தில் இருந்ததோ அதற்கு ஈடுகொடுக்கும் அளவு இசை அமைந்தது. காட்சி இல்லாமல் இசையை கேட்டாலும் புல்லரிக்கும், சோழ மக்கள் ரீமாசென்னால் ஏமற்றப்படும் காட்சிக்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை ஜி.வி. பிரகாஷ் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை ஆணித்தனமாக பதிய வைத்தது.
ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் போன்றோரை சாதாரணமாக பார்த்த மக்களுக்கு இந்த படத்தில் அசாதரமாக அறிமுகப்படுத்தியது. கார்த்தி பருத்திவீரனுக்கு அடுத்து தன் நடிப்பிற்கு தீனி போட்டிருப்பார். எந்த படத்தில் இல்லாதது போல் இந்த படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு நடிப்புக்கு இடம் அளித்தது பாராட்டுகள்.
நல்ல ரசிகர்கள் இருக்கும்வரை கலைஞர்களும் கலைகளும் அழியாது.
.
.
நன்றி !
.
.
விஜய் தேசிங்
8056128414
vijaydesing555@gmail.com















No comments:
Post a Comment