freelancing writer

My photo
Am Freelance in any Area !

Friday, August 12, 2022

தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள் – கூவாகம் மூலக்கதை







கூவாக திருவிழாவில் தாலி கட்டி மகிழ்ந்த திருநங்கைகள், இறுதி நாளில் தாலி அறுத்து ஒப்பாரி வைத்து அழுதபடி சென்றனர். சடங்குகளுடன் தங்களை உணர்வை இணைத்து கொண்டாடி முடிந்த கூவாக திருவிழா.

விழுப்புரம் மாவட்டம், உலுந்தூர்பெட்டை தாலுக்கா, சேர்ந்த பகுதியாக கூவாகம் உள்ளது, வருடாந்திரம் 14 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது கூத்தாண்டவர் கோயில் திருவிழாவாகும், இந்த திருவிழா முழுக்க முழுக்க திருநங்கைகளை முன்னிறுத்தி நடைபெறுகிறது, பொது மக்களை விட லட்சகணக்கான திருநங்கைகள் இங்கு வருகின்றனர். சாதாரண நாளில் எவராலும் கண்டுக்கபடாமல் இருக்கும் கூத்தாண்டவர் கோயில்.  சித்திரை மாதங்களில் களைகட்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, மத்தியபிரதேஷ், ஆந்திரா,  கல்கத்தா    போன்ற மாநிலங்களிலும் திருநங்கைகள் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்  ஜெர்மனி , அமெரிக்க, பிரான்ஸ் போன்ற இதர நாடுகளில் வாழும் இந்திய திருநங்கைகள் இங்கு வந்து திருவிழாவில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர். நடுத்தரமுதல், உயர் குடி, ஏழை என்ற வர்க்க ரீதியாக பல படி நிலை திருநங்கைகள் வருகின்றனர். பதினான்கு நாள் வரை நடக்கும் திருவிழாவிற்கு ஆறு மாதம் முன்பே அதற்கான பணங்களை சேர்க்க ஆரம்பித்து விடுகின்றனர். சில இடங்களில் லோக்கல் ரயிலில் செல்லும்போது  திருநங்கைகள் “கூத்தாண்டவர் கோயில் போகணும் காசு கொடுங்க” னு கேட்பார்கள்.  அப்படி ஆறுமாதம் முன்பே பல ஆர்வங்களை வளர்த்து ஒவ்வொரு திருநங்கைகளும் இருகின்றனர். இங்கு வந்தவர்களில்  பலரின் உச்சபட்ச கனவாக கூவாக கோவில் திருவிழா உள்ளது.

கூவாக திருவிழாவின் மூலக்கதை –

பெரும் இதிகாசமாக நம்பப்படுகின்ற மகாபாரதம் போரில் பாண்டவர் தரப்பு வெற்றி பெறுவதற்காக ஒரு மனித பலியை முன்னிறுத்துகின்றனர். சில அம்சம் நிறைந்த ஒருவராக அரவான் உள்ளார். அரவான் என்பவர் அர்ஜுனனுக்கும் நாககன்னிக்கும் மகனாக பிறந்தவர். இவரின் உதவியை நாடும்போது, ஐவரும் அதை ஒப்புகொண்டார்.

ஆனால் அவரின் இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து, அவளுடம் ஒரு நாள் இல்லற வாழ்கை நடந்த பின்பே பலிக்கு சம்மதிப்பேன் என கூறினார், ஒரு நாளில்  இறக்கும் ஒருவரை  எந்த பெண்ணும் திருமணம் செய்ய முன்வரவில்லை, எனவே கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து அவருடன் இல்லறவாழ்கை மேற்கொள்கிறான். பின் போர்களத்தில் முதல் பலியான அரவணை நினைத்து மோகினி அவதாரம் கொண்ட கிருஷ்ணன் அழுகின்றார்.

இந்த கதையில் அடிப்படையில் தான் கூத்தாண்டவர் கோவிலின் சடங்குகளும் நடைபெருகின்றனர். திருநங்கைகள் தங்களை கிருஷ்ணனாக பாவித்து இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.   

திருமண கோலத்தில் திருநங்கைகள் –

பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இந்த கோவில் அமைந்துள்ளது. வருடா வருடம் இந்த சமதள நிலம் வேன்கள், பஸ்கள்,கார்கள் என நிரம்பி வழியும். இங்கு திருநங்கைகள் மட்டுமல்லாமல் சில பொதுமக்களும் வேண்டுதல்காக வருகின்றனர். திருநங்கைகள் புது பட்டு புடவைகள் , தங்க நகைகள், கவரிங் நகைகள் , கை நிறைய வளையல்கள் தலையை மறைக்கும் அளவு பூ வைத்து மணப்பெண் போன்று அலங்கரித்து வந்த வண்ணம் இருந்தனர். பலர் செலவு செய்து அலங்காரம் செய்து ஆடம்பரமகா தங்களின் திருமண விழாவை நடத்தினர்.  கோவில் பூசாரிகளின் கைகளில் திருநங்கைகள் தாலி கட்டி கொண்டனர். அதிகபட்ச திருநங்கைகள் வயதான பூசாரியிடம் தாலி கட்டி கொள்கின்றனர். அவர்களை கடவுள்களாக

 காண்கின்றனர். திருமணமான மகிழ்ச்சியில் பெரிய கற்பூரம் நெருப்பு நடுவில் பெரிய வட்டமிட்டு கும்மி பாட்டுடன் கைதட்டி ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.  பின் திருமண கோலத்திலே அருகில் உள்ள கிராமத்திற்கு வளம் வந்தனர். அங்கு கூடிய இளைஞர்கள் திருநங்கைகளுடன் செல்பி எடுத்தனர். எங்கு பார்த்தாலும் சிரித்த முகத்துடன் திருநங்கைகள் வலம் வந்தனர். பெரிய சப்தங்கள் கொண்ட கை தட்டல்களுடன் திருநங்கைகள் ஆரவாரமாக இருந்தனர்.

அன்றிரவு, அவர்களுக்கு முதல் இரவு சடங்கு என்று ஒன்று வைத்திருகின்றனர். அவர்களுக்கு விருப்பமான ஆண்களுடன் உடலுறவு வைத்து தங்களின் சடங்குகளை முடிகின்றனர். இதில் சிலர் அப்படி எந்த ஒரு கட்டாய சடங்குகளும் இல்லை, தேவையானவர்கள் அதை நடத்தி கொள்வார்கள், இங்கு வரும் 90 சதவீத ஆண்கள் பெரும்பாலானோர் அதற்காகவே வருகின்றனர். சில திருநங்கைகள் அவர்கள் வரும்போதே தங்களுக்கு விருப்பமான ஆண்களை அழைத்து வருகின்றனர், அவர்களின் கையாலே தாலி கட்டி கொள்கின்றனர். அவர்களுடனே உடலுறவும் வைத்து கொள்கின்றனர். இரவில் எங்கு கண்டாலும் இந்த நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்தன.

தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள் –

முன்தினம் தாலி கட்டி கொண்டதை அடுத்து விடிய விடிய மகிழ்ச்சியுடன் கும்மி அடித்து கொண்டும், சந்தோஷமாக இருந்த திருனங்கங்களின் மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது,  தேர் நாளான இன்று திருநங்கைகள் தேர் முன்பு கர்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின் தானியங்களை அந்த தேர் மீது எறிந்தனர். அந்த தேரை கண்டு பல திருநங்கைகள் கதறி அழுதனர். தங்களின் நெஞ்சில் இடி போன்று குத்தியும், தட்டியும் ஒப்பாரி வைத்து அழுதனர்.

பின் தங்களின் தாலியை அறுத்தெடுத்து, வளையலை உடைத்து , மஞ்சள் குங்குமத்தை அழித்து கொண்டு, வெள்ளை புடவை அணிந்து கதறி அழுகின்றனர்.

பின் தொடர்ந்து ஒப்பாரியுடன்  நேற்று அவ்வளவு சந்தோஷமாக இருந்த கூத்தாண்டவர் கோவில் பகுதி இன்று அங்காங்கே ஒப்பாரி கூவலுடன் அழுகின்றனர். பார்பவரையும் அழுகை வரவைக்கும் அளவு இருந்தது அந்த ஒப்பாரி.  மகாபாரத கதையில் கிருஷ்ணன் அழுதை கொண்டு இது சடங்காக தொடர்து செய்து வருகின்றனர். ஒரு உண்மையான நெருக்கமான மனிதர் இறந்து போனால் எப்படி அழுவாரோ அந்த அளவு இங்கு இவர்கள் அழுதனர். 13நாட்களின் சந்தோஷம் இறுதியில் அழுகையுடன் முடிந்தது. தாலி அறுத்து வெள்ளை புடவை அணியும் இவர்கள் மூன்று நாள் விரதம் இருந்து, அதே விதவை கோலத்தை தொடர்ந்து இருப்பார்கள். பின் மூன்று நாட்களுக்கு பின் தங்களின் சாதாரண வாழ்கையை தொடர்கின்றனர்.

இங்கு  திருநங்கைகளின் பிரச்சனைகள்-

இங்கு திருநங்கைகளுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்கனையாக கழிவறை பிரச்சனை தான். ஒட்டு மொத்த திருவிழா பகுதியில் ஒரே ஒரு கழிவறை கட்டிடம் மட்டும் தான் அது பெரும் அவஸ்தையாக உள்ளது என அங்கு வருபவர்கள் கூறுகின்றனர்.  மற்றும் திருநங்கைகளுக்கு போதிய பாதுகாப்பு அங்கு இல்லை, அவர்கள் அணிந்து வரும் நகைகளுக்காக அவர்களை மிரட்டி வழிப்பறியும் செய்கின்றனர். இது பல ஆண்டுகளாக இது தொடர்ந்து நடைபெறுகிறது, திருவிழாவிற்கு வரும் ஆண்கள் சிலர் கைகளை பிடித்து இழுகின்றனர், மார்பகத்தை தொடுகின்றனர் என கூறுகின்றனர். இங்கு வரும் பெரும்பாலான ஆண்கள் வக்கிர புத்தியுடன் தான் வருகின்றனர் என்று கூறுகின்றார் திருநங்கை செல்வி மற்றும், அங்கு சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது, கூத்தாண்டவர் கோவிலுக்குள் செல்ல நுழைவு சீட்டு ருபாய் 5 , அதை வாங்கி பலர் வரிசையில் நிற்கின்றனர். அனால் சிலர் கோவிலின் பின் பகுதியின் வழியே நுழைந்து செல்வதால் அந்த இடத்தில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

திருவிழா பற்றியான சிலரின் கருத்து

 திருநங்கை. மனிஷா

பல வருமானம் வந்தம் வண்ணம் இருந்தாலும் இங்கு சரியான வசதிகள் இன்று வரை கை சேரவில்லை, வாகனம் நிறுத்தி வைக்க ஒரு இடம் அமைத்த்தால் வசதியாக இருக்கும், இதனால் தான் இங்கு பல முறை சாலை நெரிசல் ஏற்படும். அனைத்து வசதியும் இங்கு உள்ளது குடிநீர் வசதியை மேலும் மேம்படுத்தினால் உதவியாக இருக்கும்.

கார்த்தி (பள்ளி மாணவன்)

மூன்றாவது வருடம் இந்த வேண்டுதலை செய்து வருகிறேன், நல்லாத்தான் இருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

முத்துசெல்வன் (சமூக ஆர்வலர்)

 எய்ட்ஸ் சிகிச்சை தற்போது பலர் தாமே முன் வந்து ஏற்று கொள்கின்றனர். அது சந்தோஷம், எங்களை போல சேவை செய்பவருக்கு ஒரு நிழற்குடை அல்லது ஒரு தற்காலிக இடம் அமைத்து தந்தால் நன்றாக இருக்கும்.

திருவிழாவில் அரசின் பங்கு

திருவிழாவிற்கு மக்கள் செல்வதற்காக பல இடங்களில் இருந்து கூவாகத்திற்கு சிறப்பு பேருந்துகள் விடப்படுகின்றன.  பேருந்து நிலையத்திலிருந்து கூவாகம் கோவில் வரை போலீஸ் பாதுகாப்புகள், வெளி ஊரிலிருந்து வருபவர்களுக்காக அரசு பொது கூடம், நூறு மீட்டர் இடைவெளியில் குடிநீர் வசதி, என அமைத்துள்ளது, மற்றும் அங்கு வருபவருக்களுக்கு ஏதேனும் எச்.ஐ.வி  பாதிப்பு உள்ளதா என சோதிப்பு முகாம்கள், அதற்கான சிகிச்சை அறிவுரைகள் வழங்கபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உடலுறவு கொள்பவருக்காக ஆணுறை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மிஸ். கூவாகம்

தாலி கட்டும் நாளிற்கு முன் தினம் திருநங்கைகளின் உள்ளே  மிஸ் கூவாகம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல அழகி திருநங்கைகள் பங்குபெற்றனர். இந்த நிகழ்வு வருடா வருடம் நடைபெற்று வருவது குறிப்பிட தக்கது . இந்த விழாவை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சங்கம் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட அரசு நலத்துறை ஆகியவை இனைந்து நடத்தியது. இதில் பலவேறு பகுதிகளிலிருந்து வந்த திருநங்கைகள் பங்குபெற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த திருநங்கை மொபிணா என்பவர் மிஸ் கூவாகம் என்ற பட்டதை வென்றார். இரண்டாவது இடத்தை சென்னை போரூரை சேர்ந்த ப்ரீத்தி என்ற திருநங்கை வென்றுள்ளார்.

 வருடா வருடம் இந்த திருவிழாவில் பங்கேற்கும் திருநங்கைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டுதான் வருகின்றது , இதற்கான காரணம் பற்றி, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த  திருநங்கை. மனிஷா விடம் கேட்ட போது,

“முன்பெல்ல்லாம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா மிகுந்த பக்தியுடன், சம்பிரதாயம் மாறாமல் நடைபெற்று வந்தது, அனால் இப்போது அப்படி இல்லை பலரிடம் பக்தி குறைந்து விட்டது.

இன்று முக்கிய திருநங்கைகள் கூவகதிற்கு வருவது இல்லை காரணம், கூவாகத்தில் பாலியல் வக்கிரங்கள் அதிகரித்து விட்டது, பல முறைகளில், பல சூழ்நிலைகளில் எங்களை போன்ற திருநங்கைகள் பாலியல் தொந்தரவுகளை பார்த்ததுண்டு, ஆனால் இங்கு தான் மோசமான முறையில் துன்புறுத்தல் பார்க்க முடிகிறது. கூவகத்தை விட்டு விட்டு பலர், திருவண்ணாமலை, புலியூர் குப்பம் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.” என்றார்.

 

நிகழ்ச்கிகள்

முதல் 16 நாள் விழாவின் போது, பாடல்கள், நடனம் என கூவாகம் கலை கட்டி நிற்கும். இதன் இடையே திருநங்கைகளே அதிகளவு அனைத்து போட்டியிலும் பண்கேப்பர்கள், அரசு சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகமும் நடைபெறுகிறது.

17 நாள் தாலி கட்டுவது, பின் கடைசி நாளில் தாலி அறுபது. இதனிடையே பீஷ்மர் பிறப்பு, அரவான் பிறப்பு, பாஞ்சாலி திருமணம், தர்மர் பிறப்பு, கால பலி ஒப்புகை என பல நாட்கள் அங்கு சடங்குகளுடன் நிகழ்த்தப்படுகின்றன.முதல் வருடம் தாலி கட்டினால் மஞ்சள் கட்டை தாலி, இரண்டாம் ஆண்டு தாலி கட்டினால் வெள்ளி, மூன்றாம் முறை தங்கம் என திருமண ஆண்டை படிநிலை படுத்தி வைத்திருகின்றனர்.தங்களுக்கென பெண் வழி குடும்பமாக அம்மா, மகள், பேத்தி என உருவாக்கி குடும்பத்துடன் ஒன்றி இங்கு வருகிறார்கள்.

இப்படி பல சந்தோஷங்களையும், துக்கதையையும் மதன்களைகடந்து காலம் காலமாக தங்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.திருநங்கைகளின் வாழ்க்கையில் பல இன்னல்கள் குடும்பம் சார்ந்து, சமூகம் சார்ந்து சந்தித்து வந்தாலும் தங்களின் பெருமையான நாளாக சித்திரை நாட்களை நினைகின்றார்கள், இங்கு சிலர் முழுவதும் திருநங்கையாக மாறாமல் குடும்பத்துடன் வெளியூரிலிருந்து வந்து, இந்த இடத்தில் பெண் வேடமிட்டு அவர்களின் சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றனர். அனால் இவர்களை பொறுத்த வரை முழு திருநங்கையாக மாறி தாலி கட்டுபவரே அரவானின் மனைவியாவர் என்கின்றனர்.

 

-       விஜய் தேசிங் 

 

        

             

 

 

 

 

 

 


 

 

 

 

No comments:

Post a Comment

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல.. - மருது சகோதரர்கள் வீழ்த்தப்பட்ட கதை

துரோகங்கள் தமிழர்களுக்கு புதிதல்ல..  என்ற வரலாறு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ம...