திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 100 வது பிறந்தநாள் இந்தாண்டு தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழும் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் இன்று அவரை நினைவு கூறுகிறது இந்த சிறப்புகட்டுரை.
தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு ஊடகாமாகவும் கலை சார்ந்த விஷயமாக மட்டுமின்றி அது ஒரு உணர்வாக பார்க்கப் பட்டு வருகிறது. அதில் இடம் பெரும் காட்சிகள் வாழ்வியலாகவும் ஹீரோ தலைவராகவும் பார்க்கப் படுகிறது. அந்த சினிமாவினை இன்று வியாபார நோக்கில் பலர் அணுகி வருகின்றனர். ஆனால் சரியான வழியில் சரியான நோக்கத்தில் சினிமாவின் உண்மையான சக்தியை அறிந்து அதனை சரியாக முறையாக பயன்படுத்திய பெருமை கலைஞர் கருணாநிதிக்கே சேரும். தன் சிறு வயதிலிருந்தே தமிழ் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் தன் வாழ்நாளின் ஆரம்ப காலத்திலிருந்து ஏராளமான கவிதைகள், கட்டுரைகள் எழுதி தன் எழுத்து திறமையினை வளர்த்து பின் நாடங்களிலும் திரைப்படங்களிலும் திரைக்கதை எழுத வந்தார் கருணாநிதி..
கடந்த 1947 ல் எம்.ஜி.இராமசந்திரன் நடிப்பில் உருவான ராஜகுமாரி
திரைப்படத்தில் திரைக்கதையாசிரியராக முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகமானார்
கலைஞர் கருணாநிதி. இந்த திரைப்படமே கருணாநிதி எம்.ஜி.ஆர் இருவருக்குமே
திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். இப்படத்தின் மூலமே இருவருக்குமான நட்புறவு
தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தீண்டாமை, விதவைகள, மூட நம்பிக்கை கொடுமைகள், சுயமரியாதை திருமணம் என்று பல விஷயங்களை தன் எழுத்தில் வைத்து அதனை திரைக்காவியமாக மாற்றி மக்களிடையே அழுத்தமான சிந்தனைகளை பதிய செய்தார். அதை தொடர்ந்து இதிகாசங்கள், கற்பனை கதைகள், கடவுள் அடிப்படை கதைகள் என்று தமிழ் சினிமா இருந்த காலத்தில் மக்கள் பிரச்சனை, வாழ்வியல் சிக்கல்கள், உறவு, சமூக கடமைகள் என்று தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி புரட்சி செய்தவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார் கலைஞர். மேலும் திரைப்படங்களில் பேச்சு வழக்கு தமிழ் மொழியை சினிமாவில் அறிமுகப்படுத்தி பெரும் மாற்றத்தை உருவாக்கினார்.
திரைப்படங்களுக்கு தடைக்கோரி பல சர்ச்சைகள் இன்று நிகழ்கிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி திரைப்படங்களுக்கு அன்றே பல பிரச்சனைகள் தணிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக சர்ச்சைக்குள்ளான திரைப்படம் பாராசக்தி. தடைகளை தாண்டி பராசக்தி வரலாறாக மாறியது. திரைத்துறையில் கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் தன் எழுத்தை ஒவ்வொரு துறையிலும் பரிணமித்து காலத்தை அழிக்க முடியாத காவியங்களை கொடுத்தவர் கலைஞர். தணிக்கை மட்டும் இல்லையென்றால் திரைப்படங்கள் மூலம் திராவிட நாட்டை எளிதாக பெற்று கொடுத்து விடுவேன் என்று அறிஞர் அண்ணா சொல்லியதை செய்ய துவங்கியதை கலைஞர் கருணாநிதி செய்து அதற்கான பாதையை வகுத்து சென்றுள்ளார். மாபெரும் திரைக்கலைஞர் கருணாநிதி அவர்களின் இருப்பு பல நூறு ஆண்டு கடந்தும் அவரது தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மூலம் நீடித்து நிற்கும் என்று சொன்னால் மிகையாகாது.
